சேலம், ஆக.18: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா மற்றும் தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், சேகோ ஆலைகளில் ஜவ்வரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு போதிய மழை இல்லாததால், எதிர்பார்த்த அளவில் மரவள்ளிக்கிழங்கு விளைச்சல் இல்லை. சில விவசாயிகள் இருக்கும் நீரை கொண்டு, மரவள்ளிக்கிழங்கை சாகுபடி செய்தனர்.
கடந்த சில நாட்களாக மரவள்ளிக்கிழங்கு அறுவடை நடந்து வருகிறது. சேலம் உள்பட 5 மாவட்டங்களில், அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்கை, விவசாயிகள் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக சேகோ ஆலைகளில் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் விநாயகர், சதுர்த்தி, நவராத்திரி விழா மற்றும் தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசை கட்டி இருப்பதால் ஜவ்வரசியின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சேகோ ஆலைகளில் ஜவ்வரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது.



