சேலம், செப்.8: சேலத்தில் ஆடிப்பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு பொருட்காட்சி கடந்த மாதம் 8ம் தேதி தொடங்கியது. இப்பொருட்காட்சியில் 26 அரசு துறைகள் மற்றும் 5அரசு சார்பு நிறுவனங்கள் என மொத்தம் 31 துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் பொதுமக்கள் பலர் கண்காட்சிக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், அங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்களிலும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றனர். அரசு பொருட்காட்சியில் கடந்த மாதம் 12ம் தேதி முதல் நுழைவுகட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் 6ம் தேதி வரை 26 நாட்களில் 66,076 பெரியவர்கள், 14,672 சிறியவர்கள் என மொத்தம் 80,748 பேர் பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர். இவர்கள் மூலம் நுழைவு கட்டணமாக ரூ.11.37 லட்சம் வசூலாகியுள்ளது. வரும் 25ம் தேதி வரை பொருட்காட்சி நடக்கிறது.


