Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூய்மை பணியாளர்கள் போராட்டம் எதிரொலி: சேலம் அரசு மருத்துவமனையில் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு

சேலம், ஜூலை 1: சேலம் அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள குப்பைகளால் நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உள்ளதால், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது பல்வேறு துறைகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையின் வார்டில் பயன்படுத்தப்படும் கை கிளவுஸ், பஞ்சுகள், சிரஞ்சுகள், ரத்தகாய துணிகள், அறுவை சிகிச்சை கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள், உணவுப்பொருட்கள் ஆகியவை கிரிஸ்டல் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. சேகரித்த குப்பைகள் தரம் பிரித்து எடுத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவு அருகில் கொப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படுகிறது. தொடர்ந்து சேலம் மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனத்தின் மூலம் மருத்துவமனை கழிவுகள் நாள்தோறும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சேலம் மாநகரின் பல்வேறு வீதிகளில் உள்ள குப்பைத்தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. அதேபோல், சேலம் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் எடுத்துச்செல்லப்படாமல் மருத்துவமனையிலேயே குவிந்துள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து டீன் அலுவலகம் செல்லும் சாலையில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இருந்து, பயோ-கெமிஸ்ட்ரி ஆய்வகத்திற்கு செல்ல பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, மருத்துவமனையில் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், சுகாதாரம் என்பது சுத்தத்தை அடிப்படையாக கொண்டது. இப்படி சுகாதார மேம்பாட்டிற்கு அடித்தளம் அமைக்கும் சுத்தம் என்பது மருத்துவமனைகளில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அரசும், மருத்துவமனை நிர்வாகமும் இதற்கு முன்னுரிமை ெகாடுத்து செயல்பட வேண்டும்.

ஆனால் சேலம் அரசு மருத்துவமனையில் சிலநாட்களாக இது தலைகீழாக உள்ளது. கேட்டால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை காரணமாக கூறுகின்றனர். இந்தநிலை நீடித்தால் அரசு மருத்துவமனையே நோய் உற்பத்தி கூடாரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. எனவே மருத்துவமனையின் சுகாதாரம் காப்பதற்கு அதிகாரிகள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.