சங்ககிரி, அக்.30: சங்ககிரியில் வழிப்பறி வழக்கில், 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான வாலிபரை 3 ஆண்டுக்கு பின் நேற்று தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையத்தில் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி காந்தி குப்பம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் நிவாஸ் (26). இவர் கடந்த 2021ம் ஆண்டு, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக, சங்ககிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு, சங்ககிரி சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2023ம் ஆண்டு கவுதம் நிவாசுக்கு 7 ஆண்டு 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து கவுதம் நிவாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் மாதம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனிடையே, மனு தள்ளுபடியானதும், கவுதம் நிவாஸ் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், சங்ககிரி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில் கவுதம் நிவாஸ், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையம் சென்று, அங்கு பதுங்கியிருந்த கவுதம் நிவாசை கைது செய்தனர். பின்னர், அவரை சங்ககிரி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


