சேலம், அக்.30: சேலம் மாநகரில் கழிவுநீர் வாய்க்காலாக காட்சி தரும் திருமணி முத்தாறு, செடி கொடிகள் முளைத்து நோய் பரப்பும் கேந்திரமாகவும் மாறிவருகிறது. எனவே, இதனை துரிதகதியில் தூய்மைப்படுத்தி அபாயங்களை தவிர்க்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மலைகள் சூழ்ந்த சேலம் மாவட்டம் பல்வேறு சிறப்பு வாய்ந்த நீர்நிலைகளையும் கொண்டுள்ளது. இந்தவகையில் நூறுக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தாலும் பிரதானமாக இருப்பது திருமணிமுத்தாறு. ஏற்காடு சேர்வராயன் மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் மாநகரின் மையப்பகுதிகளை தொட்டு, நாமக்கல் ராஜவாய்க்கால் வழியாக பாய்ந்து காவிரியாற்றில் கலக்கும் வரலாற்று சிறப்பு பெற்றது. சேலம் மாநகர் மற்றும் நாமக்கல் வழியாக சுமார் 120கிலோ மீட்டர் தொலைவிற்கு பாயும் ஆறு என்ற சிறப்பும் இதற்கு உண்டு. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும் உள்ளது.
இத்தகைய பெருமைக்குரிய திருமணி முத்தாறு, கடந்த சில ஆண்டுகளாக சேலம் மாநகரின் சாக்கடை மற்றும் சாயக்கழிவுகள் கலக்கும் கழிவுநீர் கால்வாயாக மாறி வருகிறது. அதிலும் தற்போதைய மழைக்காலத்தில் செடி, ெகாடிகள் முளைத்து விஷஜந்துக்களின் புகலிடமாக மாறி வருகிறது. நன்னீர் கொடுத்த திருமணிமுத்தாறு நோய்பரப்பும் கேந்திரமாக மாறி வருவது வேதனைக்குரியது. துரித கதியில் இதனை தூய்மைப்படுத்தி அபாயங்களை தவிர்க்க வழிவகுக்க வேண்டும் என்பது மக்களின் குரலாக மாறியுள்ளது.
இதுகுறித்து நீர்வள மேம்பாடு சார்ந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறியதாவது: சேலம் மாநகரின் மையப்பகுதியாக பாய்ந்தோடும் திருமணி முத்தாற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. திருமணி முத்தாறு தூய்மை திட்டம் பலமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. தமிழகத்தின் பலஆறுகள் தற்போது கழிவுநீருக்கான வடிகாலாக மாற்றப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் திருமணி முத்தாறும் இடம்பிடித்துள்ளது. சேர்வராயன் மலையில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு, வரும் வழியில் சேலம் மாநகரை தொடுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே அதன் வழித்தடங்களில் ஆங்காங்ேக கழிவுநீர் சேரத் தொடங்கி விடுகிறது. இது மாநகர பகுதியை தொட்டதும் மேலும் அதிகமான கழிவுகள் சேர்கிறது.
இதில் குறிப்பாக சாயப்பட்டறைகளின் கழிவுநீரே அதிகளவில் கலக்கிறது. இதனால் அதன் நீரோட்டம் முழுவதும் கழிவுநீராக மாறி விடுகிறது. ‘சீர்மிகுநகரம்’ திட்டத்தில் இதை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. திருமணி முத்தாற்றின் கரையோரங்களில் கம்புவேலி தடுப்பு அமைத்து, அதை தூய்மைப்படுத்தி நன்னீரை தேக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக ஆற்றின் வழித்தடத்தில் சில பகுதிகள் தூய்மையாக்கப்பட்டு குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டது.
ஆனால் கோட்டையை அடுத்துள்ள ஆற்றின் படுகைக்கு பின்னர், தூய்மைப்படுத்தும் பணிகள் சரிவர நடக்கவில்லை. இதனால் திருமணி முத்தாறு பாயும் இதற்கடுத்த பகுதிகள் அனைத்தும் கழிவுநீர் வாய்க்காலாக மாறி, சென்னையின் கூவம் போல் காட்சியளிக்கிறது. தற்போது கழிவுநீர் செல்வதற்கான ஆறாக மட்டுமே இது மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்களின் பழைய பொருட்களை கொட்டும் இடமாக திருமணி முத்தாறு நீர்வழித்தடங்கள் மாறியுள்ளது. இதேபோல் வீட்டுக்கழிவுகள், இறைச்சி கழிவுகள் என்று சகலமும் திருமணிமுத்தாற்றுக்கு திருப்பி விடும் அவலம் தொடர்கிறது.
இதேபோல் சேலம் அணைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருமணி முத்தாற்றின் நீர்வழித்தடங்கள் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் பலவிதமான செடி, கொடிகள் முளைத்து விஷஜந்துக்களின் புகலிடமாகவும் திருமணிமுத்தாறு மாறி வருகிறது. புராண காலத்தில் திருமணி முத்தாற்றில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்று குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. ஆனால் தற்போது கழிவுநீர் கலப்பிடமாக மாறி, செடிகொடிகள் வளர்ந்து நிற்கும் திருமணி முத்தாறு நோய்பரப்பும் ஆதாரமாக மாறி வருவது மிகவும் வேதனைக்குரியது. இதை கருத்தில் கொண்டு அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் திருமணி முத்தாற்றை தூய்மைப்படுத்த துரித கதியில் நடவடிக்ைககளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


