சேலம், செப்.30: சேலம் டவுன் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவியை, திருமணமான 29 வயதான நபர் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் டவுன் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
2 மாத சிறை வாசத்திற்கு பிறகு, கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்து போட்டு வந்தார். இந்நிலையில் அந்த மாணவியை காணவில்லை. விசாரணையில் அதே வாலிபர் அந்த மாணவியை மீண்டும் அழைத்துக்கொண்டு ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மீண்டும் புகார் கொடுத்தனர். இதையடுத்து மீண்டும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், நாமக்கல்லில் பதுங்கியிருந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


