சேலம் அரசு மருத்துவமனையில் அடுக்குமாடி டூவீலர் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
சேலம், அக்.29: சேலம் அரசு மருத்துவமனையில் அடுக்குமாடி டூவீலர் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது பல்வேறு துறைகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சேலம் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். நாள்தோறும் புறநோயாளிகள் பிரிவில் சராசரியாக 4000 பேரும், உள்நோயாளிகள் பிரிவில் 1500க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவ சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள், மருத்துவமனையின் அம்மா உணவகம், பழைய புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவத்துறை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் முன்புள்ள காலியிடங்களில் டூவீலர்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அங்கு போதிய இடம் இல்லாதபோது, டூவீலர்களை மருத்துவமனையில் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி விட்டுச்செல்கின்றனர். இதனால் ஆம்புலன்ஸ் எளிதில் வந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஓரிடத்தில் டூவீலர் பார்க்கிங் வசதி இல்லாததால் தொடர்ச்சியாக டூவீலர் திருட்டு சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,“சேலம் அரசு மருத்துவமனையில் டூவீலர்களை நிறுத்த முறையான பார்க்கிங் வசதி இல்லை. இதனால் பார்க்கும் இடங்களில் எல்லாம் டூவீலர்களை நிறுத்திவிட்டு செல்லும் நிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே டூவீலர்களை நிறுத்தி விட்டு செல்வதால், மர்ம நபர்கள் தொடர்ச்சியாக திருடிச்செல்லும் சம்பவங்கள் நடக்கிறது. பொதுமக்களின் நலன்கருதி, சேலம் அரசு மருத்துவமனையில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் (மல்டிலெவல் டூவீலர் பார்க்கிங்) அமைக்க வேண்டும். ஓரிடத்தில் டூவீலர் பார்க்கிங் அமைத்து, வாகன ஓட்டிகளுக்கு குறைந்த கட்டணத்தில் டோக்கன் வழங்குவதன் மூலம், வாகன திருட்டை முற்றிலும் தடுக்க முடியும்,’’என்றனர்.


