Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சேலம் சீலநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட வந்த இ.கம்யூ. கட்சியினர் போலீசுடன் மோதல் ஒருவரையொருவர் தாக்கியதால் பரபரப்பு

சேலம், அக்.29: சேலம் சீலநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு மோதலானது. இதில் அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர். சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் தனியார் மருத்துவமனை எதிர் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இது மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. இதனால் 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள், 2 கடைகளும் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் கடைகளை பலநாட்களாகியும் அகற்றவில்லை.

இந்நிலையில் நேற்று 2 டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு போடும் போராட்டம் அறிவித்தனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட கட்சியினர் வந்தனர். இதையொட்டி துணை கமிஷனர் மகேந்திரன், உதவி கமிஷனர் பரவாசுதேவன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் டாஸ்மாக் கடை முன்பு பேரிகார்டு போட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைகளை மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். மேலும் பூட்டு மற்றும் சங்கிலியுடன் டாஸ்மாக் கடைகளை நோக்கி முன்னேறி சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தாக்கப்பட்டனர்.

போலீசாருக்கும் அடி விழுந்தது. ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சீலநாயக்கன்பட்டி- டவுன் சாலையின் இருபுறமும் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துணை கமிஷனர் மகேந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர். இதையடுத்து மீண்டும் கடை முன் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனிடையே தாசில்தார் காந்தி தேசாய் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘‘இன்னும் 15 நாட்களுக்குள் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு எழுத்து பூர்வமாக எழுதி கொடுக்கும்படி தெரிவித்து தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அவர்களுக்கு எழுதி கொடுத்தனர். பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதால் அவர்களில் 20 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.