Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேட்டூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் இறந்த சிசுக்களின் சடலங்களுடன் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

மேட்டூர், ஜூலை 29: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மோனிகா (20) என்ற கர்ப்பிணி சிகிச்சை பெற்று வந்தார். அவரது வயிற்றில் ஒரு குழந்தை உள்ளதாக கூறி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ள னர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மோனிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மோனிகாவை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு, மருத்துவர் இல்லாத காரணத்தால், சேலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் இரண்டு சிசுக்கள் பிறந்து இறந்த காரணத்தால், அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, இறந்த சிசுக்களின் உடல்களை கட்டைப்பையில் போட்டு எடுத்து சென்று குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், கடந்த 12 ஆண்டுகளாக இதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகவும், காலதாமதமாக பணிக்கு வருவதாகவும் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த, நங்கவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, மேச்சேரி வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.