சேலம், ஜூன் 29: வார விடுமுறை நாளான நேற்று ஏற்காடு, ஒகேனக்கல் மற்றும் மேட்டூரில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், பூங்காக்களில் உற்சாகமாக பொழுதை கழித்தனர். மேலும், அங்குள்ள ஏரி மற்றும் ஒகேனக்கல் காவிரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஏற்காட்டிற்கு, வார விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். கடந்த சில நாட்களாக நிலவி வரும் இதமான தட்பவெப்ப நிலை மற்றும் அவ்வப்போது வீசும் குளிர்ந்த காற்றை அனுபவிக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு சனிக்கிழமை அதிகாலையிலேயே வந்திருந்தனர். இரண்டாவது நாளான நேற்று அதிகாலை முதலே டூவீலர், கார்கள் மற்றும் சுற்றுலா வேன்களில் பயணிகள் ஏற்காட்டு மலைப்பாதையின் 20 கொண்டைஊசி வளைவுகளையும் கடந்து வரத்தொடங்கினர்.
ஏற்காட்டின் முக்கிய சுற்றுலா தலங்களான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட் மற்றும் பக்கோடா பாயிண்ட், கரடியூர் வியூ பாயிண்ட் போன்ற இடங்களில் நின்று, மலையடிவார காட்சிகளையும், இயற்கை எழிலையும் சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்தனர். ஏற்காட்டின் மையப்பகுதியில் உள்ள அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம் ஆகிய இடங்களில் வண்ணமயமான மலர்களை பார்த்து பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக, குழந்தைகளுடன் வந்த குடும்பங்கள் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி தங்களது விடுமுறை நாளை உற்சாகமாக கழித்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
ஏற்காட்டின் மிக உயர்ந்த சிகரமான சேர்வராயன் மலைக்கோயிலுக்கு சென்ற பொதுமக்கள், பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் தாவரவியல் பூங்கா போன்ற பகுதிகளிலும் கணிசமான அளவில் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வாகன வருகை அதிகரித்ததன் காரணமாக, ஏற்காடு ஏரி சாலை, அண்ணா பூங்கா சந்திப்பு மற்றும் முக்கிய வியூ பாயிண்ட் சாலைகளில் ஆங்காங்கே சிறு சிறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூலாம்பட்டி: குட்டி கேரளா என்ற அழைக்கப்படும் இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டிக்கு வார விடுமுறை நாளான நேற்று வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிந்தனர். அவர்கள் விசைப்பாடகில் உற்சாக சவாரி சென்று மகிழ்ந்தனர். செல்பி படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இங்குள்ள மீன் கடைகள், ஓட்டல்களில் உணவு விற்பனை களைகட்டியது. சிறுவர் பூங்கா, மாட்டுக்காரர் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், குடும்பம், குடும்பமாக வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் மசாஜ் செய்து கொண்டு, மெயினருவி, சினிபால்ஸ் மற்றும் தண்ணீர் குறைவாக செல்லும் காவிரி ஆற்றில் குழந்தைகளுடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர், பரிசல் சவாரி செய்து அருவிகளின் அழகை அருகாமையில் கண்டு ரசித்தனர். அங்குள்ள மீன் உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் திரண்டு வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் சீர் செய்தனர். மேலும், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் விதமாக, ஊர்க்காவல் படையினர் மற்றும் தீயணைப்பு படையினருடன் இணைந்து போலீசார் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டூர்: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூருக்கு நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அங்குள்ள டெல்டா கால்வாயில் குளித்து மகிழ்ந்த அவர்கள், அணையின் காவல் தெய்வமான முனியப்பனை தரிசித்து வழிபட்டனர். பின்னர், அணை பூங்காவில் தங்களது குடும்பத்தினருடன் மீன் வறுவல் உள்ளிட்ட உணவுகளை சுவைத்து ஓய்வெடுத்தனர். தொடர்ந்து, அங்குள்ள விளையாட்டு சாதனங்களில் தங்களது குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும், அணையின் பவள விழா நினைவு கோபுரத்திற்கு சென்று மேட்டூர் அணையின் முழு அழகையும் கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.


