சேலம், செப்.28: சேலம் மாநகராட்சி பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் மாநகராட்சிக்கு, மேட்டூர் தொட்டில்பட்டியில் இருந்து தினமும் 137 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சியின் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம், அனைத்து வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டு குடிநீர் இணைப்புகள் மற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர பொது குழாய் மூலமாகவும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை, 5 அல்லது 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்காக 12,400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாநகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில், 10 நாட்களாகியும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓரளவு வசதி படைத்தவர்கள் குடிநீருக்கு ‘கேன்’ தண்ணீரை பயன்படுத்தினாலும், ஏழை மற்றும் நடுத்தர வர்த்தகத்தை சேர்ந்தவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல், பலர் மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு சென்று, வாகனங்கள் மூலமாக குடிநீரை பிடித்துச்செல்கின்றனர். குடிநீர் விநியோகம் செய்யப்படும் போது, மண் கலந்து தண்ணீர் கலங்கலாகவும், புழுக்கள் கலந்தும் வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேல்நிலை தொட்டிகளில் போதுமான அளவு குளோரின் கலக்காமல் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், மேட்டூரில் பராமரிப்பு பணி எனவும், குடிநீர் குழாய் உடைப்பு சீர் செய்யப்படுகிறது என்றும் காரணம் கூறுகின்றனர். சமீபத்தில் தான் மேட்டூரில் மோட்டார் சீர் ெசய்யப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல கோடி செலவிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக மாதந்தோறும் ரூ.40 லட்சம் வரை செலவிடப்பட்டு வருகிறது. இருப்பினும், மேட்டூரில் இருந்து விநியோகம் செய்யப்படும் தண்ணீரில், முறையாக குளோரின் கலக்கப்படுவதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, 5 நாளுக்கு ஒருமுறையாவது குடிநீர் விநியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `மேட்டூர் தொட்டில்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து 137 எம்எல்டி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரில் வீடு, வணிக நிறுவனங்களில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்பபடுவதை தடுக்கும் வகையில், விதிமீறி வைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’ என்றனர்.


