Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய கட்டிட பணிகள் நிறைவு

சேலம், ஜூலை 27: சேலத்தில் 80ஆண்டுகள் பழமையான சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.6 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் திறப்பு விழா செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையானது முதன் முதலில் இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட சேதத்தால், பிரிட்டன் அரசால் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னையில் முதன் முதலில் தீயணைப்புத்துறை கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தீயணைப்பு நிலையம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகிறது. இந்த தீயணைப்பு நிலையங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இயற்கை பேரிடர் காலம், வெள்ளஅபாயம், தீ விபத்து, விலங்குகள், மிருகங்கள் நீர்நிலைகளில் விழும்போதும், தண்ணீரில் மனிதர்கள் மாட்டிக்கொள்ளும் போதும் தீயணைப்பு வீரர்கள் சென்று தன் உயிரை பணயம் வைத்து மற்றவர்களை காப்பாற்றி வருகின்றனர். இவர்களின் சேவை மகத்தானது.

சேலம் மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசுக்கும், தீயணைப்புத் துறை தலைமையிடத்திற்கும், மாவட்ட நிர்வாகம் பலமுறை கடிதம் அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த அரசு, செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய கட்டிடத்தை இடித்து, நவீன முறையில் மூன்று அடுக்கு கொண்ட கட்டிடம் கட்ட ஒப்புதல் வழங்கியது. இதற்கான பணி கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பணிகள் நிறைவு பெறும் தருவாயை எட்டியுள்ளது. இது குறித்து சேலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், மேட்டூர் அணை, மேட்டூர் தெர்மல், ஓமலூர், நங்கவள்ளி, சங்ககிரி, எடப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி என 14 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு நிலைய அலுவலர், 15 முதல் 20 தீயணைப்பு வீரர்கள் பயணியாற்றி வருகின்றனர். செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம், கடந்த 1942ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி தொடங்கப்பட்டது.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் வரை செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் தலைமையிடமாக இருந்தது. 5 மாவட்டங்களில் ஏதாவது தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டால், இங்கிருந்து தான் தீயணைப்பு வாகனங்கள் செல்லும். பின்னர், நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் கடந்த 1982ம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 1992ம் ஆண்டு நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களும், 1994ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் தொடங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் பழமையான கட்டிடத்தை இடித்து விட்டு புதியதாக நவீன கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த அரசு, ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்தது. புதிய கட்டிடம் மூன்று அடுக்குகளை கொண்டது. இங்கு தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் அலுவலகம், நிலைய அலுவலர் அலுவலகம், தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள் தங்குவதற்கான அறைகள், வாகனங்கள் நிறுத்த தனியிடம் என்று நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளது. விரைவில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.