Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை வாங்க மாட்டோம்: கலெக்டரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு

சேலம், மே 26:டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை வாங்க மாட்டோம் என சேலத்தில் கலெக்டரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர். சேலம் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டர் இளம்பகவத்திடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் தொழிற்சங்க நிர்வாகி சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது.

முதல்வரும், அமைச்சரும் தொழிலாளர்களான எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும். புதிய சட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கூட்டம் நடத்தி கூறியுள்ளார். அதில், இரவு 10 மணி வரை தான், கடையில் பணியாளர்கள் இருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, யாராவது கடைக்குள் இருந்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனக்கூறியுள்ளார். ஆனால், இரவு 10 மணிக்கு கடையை பூட்டிய பிறகு, கணக்குகளை பார்க்க குறைந்தது 3 மணி நேரம் ஆகும். அதனால், கடையை பூட்டிவிட்டு உள்ளே அமர்ந்து அந்த பணியை முடித்து திரும்பும் சூழல்தான் நிலவுகிறது.

அதேபோல், காலி மதுபாட்டில்களை பெற்று கொள்ள தனி டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் டெண்டர் எடுத்த நபர்கள் தரப்பில், ரூ.10க்கு காலி பாட்டில்களை திரும்ப பெற யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த பணியையும் எங்களை செய்ய சொல்வதால், பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளோம். அதனால், காலி பாட்டில்களை திரும்ப பெற்று கொள்ள மாட்டோம். டாஸ்மாக் கடைக்கான வாடகை, மின் கட்டணம், இதர செலவு என ஒரு கடைக்கு ரூ.8 ஆயிரம் செலவாகிறது. அதனால் புதிய அரசு எந்த திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தாலும், ஊழியர்களான எங்களிடம் கலந்தாலோசித்து தான், செயல்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முதலில் அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும். இல்லையென்றால் கேரளா சென்று அங்குள்ள நடைமுறையை பார்த்துவிட்டு வந்து அமல்படுத்த வேண்டும். இவற்றை மேற்கொள்ளாவிட்டால், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.