சேலம், அக்.23: பருவமழையையொட்டி சேலம் மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்காதவாறு ஓடை, மழைநீர் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையையொட்டி, சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள ஓடைகள், மழைநீர் கால்வாய்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் தூர்வாரும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அஸ்தம்பட்டி மண்டலம் டி.வி.எஸ் ஓடை, செவ்வாய்பேட்டை திருமணிமுத்தாறு, கந்தம்பட்டி திருமணி முத்தாறு, குறிஞ்சி நகர் ராஜவாய்க்கால் ஓடைகளில் தூர்வாரப் பட்டு வருகிறது. அம்மாபேட்டையில் வெள்ளக்குட்டை ஓடை, ராமநாதபுரம் ஓடை, குமரகிரி ஒடை, கொண்டலாம்பட்டி ஓடைகளில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும், சாக்கடை கால்வாய்களில் தூர்வாரும் பணியை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘பருவமழையையொட்டி, சேலம் மாநகரில் ஓடை, சாக்கடை கால்வாய்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 10க்கும் மேற்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளில் சுகாதார அதிகாரிகள், செயற்பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும் சாக்கடை கால்வாய்களை தூர்வார சுகாதார பணியாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்’’ என்றனர்.


