சேலம், அக்.23: சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு இதுவரையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.799 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த இலக்கை அடைய வங்கி மேலாளர்கள், உரிய முறையில் கடன்களை வழங்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுக்கான கருத்துப்பட்டறை நேற்று நடந்தது. கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) கோமகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். இக்கருத்துப்பட்டறையில், மகளிர் சுயஉதவிக்குழு வங்கிக்கடன் இணைப்பு, கூட்டமைப்பிற்கான பெருங்கடன், சமுதாயம் சார்ந்த கடன், வாராக்கடன், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி, மின்னணு நிதி மேலாண்மை, சமூக பாதுகாப்பு திட்டங்கள், வட்டி மானியம் போன்ற தலைப்புகளில், வங்கியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது: பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு, பெரும்பாலான நடவடிக்கைகளை வங்கிகள் மூலமே மேற்கொண்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்று சேர்வதை உறுதிசெய்யும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்படுவதற்கு முன்பாக, கிராமப்புறங்களில் முறை சார்ந்த வங்கிக்கடன் இணைப்புகள் வழங்கப்படுவது மிகவும் குறைவாகவே இருந்தது. தற்போது, சேலம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 15,931 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 5,491 மகளிர் சுயஉதவிக்குழுக்களும் என மொத்தம் 21,422 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், ஊரக பகுதிகளில் 1,84,412 உறுப்பினர்களும், நகர்ப்புறத்தில் 62,883 உறுப்பினர்களும் என மொத்தமாக 2,47,295 பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் இடம் பெற்று, வங்கி அமைப்புகளோடு மிக எளிதாக இணைக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டு 19,486 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1,715 கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 22,322 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1,720.75 கோடி கடன் இணைப்பு வழங்கப்பட்டு 100 சதவீத இலக்கு எட்டப்பட்டது. நடப்பு நிதியாண்டான 2026-27ம் ஆண்டில் 17,805 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1,614 கோடி கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 9,203 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.798.68 கோடி கடன் இணைப்பு வழங்கப்பட்டு 49.48 சதவீத இலக்கு எய்தப்பட்டுள்ளது.
அதேபோன்று 2026-27ம் ஆண்டிற்கு பொருட்களை உற்பத்தி செய்யும் 559 சுயஉதவிக்குழு உறுப்பினர்களான பெண் தொழில் முனைவோருக்கு வங்கிக்கடனாக ரூ.10.27 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் பெறும் கடனுதவிகள், பிள்ளைகளின் கல்விச்செலவுகள், தொழில் முதலீடு, விவசாயம் மற்றும் குடும்ப மருத்துவ செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் வாங்கும் சிறிய அளவிலான கடன்களிலும் கூட திரும்பச் செலுத்தும் அர்ப்பணிப்பும், நாணயமும் மிக அதிகமாக உள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்திலும் கடன்களை சரியான முறையில் செலுத்தியுள்ளனர். எனவே, தகுதியான மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன் விண்ணப்பங்களை வங்கியாளர்கள் உரிய காலத்திற்குள் பரிசீலித்து, அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கி விதிமுறைகளின்படி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதன் மூலம் மகளிரின் பொருளாதார சுதந்திரம், குடும்ப வருமானம் மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மேம்படும். இந்தியாவில் வங்கிகளின் அமைப்பு மிகவும் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் உள்ளது. அதனால், வங்கியாளர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் முன்னேற்றத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், உதவித்திட்ட அலுவலர் (நிதி உள்ளாக்கம்) செங்கோட்டுவேல், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னா பாலமுருகன், தாட்கோ மாவட்ட மேலாளர் சக்திவேல் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வங்கி கிளைகளின் மேலாளர்கள் கலந்துகொண்டனர்.


