Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் மரவள்ளி ஆராய்ச்சி நிலையத்தில் அதிக மகசூல் தரும் 3வது ரக மரவள்ளி விதை கண்டுபிடிப்பு

சேலம், ஜூன் 23: சேலம் மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் அதிக மகசூல் தரும் 3வது ரக மரவள்ளி விதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு விவசாயத்தை பெருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதை, விவசாய வழிமுறை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 1.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மிக அதிகப்பட்சமாக சேலம் மாவட்டத்தில் மரவள்ளி பயிரை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதற்கடுத்து நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களிலும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் இந்த மரவள்ளி விவசாயம் அதிகளவு நடக்கிறது. மரவள்ளி கிழங்கில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசிக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது. சேலம் சேகோசர்வ், ஜவ்வரிசி உற்பத்தி மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குகிறது. வட மாநில மக்களின் தேவைக்கும் சேலத்தில் இருந்து அதிகப்படியான ஜவ்வரிசி அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த மரவள்ளி விவசாயத்தில் தற்போது, ஏத்தாப்பூர்-1, ஏத்தாப்பூர்-2 என்ற இரு ரகத்திலான மரவள்ளி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரகங்களில் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் மரவள்ளிக்கிழங்கு மகசூல் கிடைக்கிறது. இந்த கிழங்கின் மாவுச்சத்து என்பது 20 முதல் 25 சதவீதம் இருக்கிறது. இந்த மகசூல் மற்றும் மரவள்ளி கிழங்கின் மாவுச்சத்தை அதிகரிக்கும் வகையிலான புதிய 3வது ரக மரவள்ளி விதையை சேலம் மரவள்ளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இம்மூன்றாவது ரக விதையை தற்போது சோதனை அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில், குறைந்த பரப்பில் பயிரிட்டு, அதன் மகசூலை கணக்கிட்டு வருகின்றனர்.

தண்ணீர் தேவையை குறைவாக எடுத்துக்கொண்டு, நல்ல வளர்ச்சியோடு அதிக மகசூல் தரும் வகையில், இப்பயிர் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த 3வது ரக மரவள்ளி விதையை மிக விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதுபற்றி சேலம் மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் திருக்குமரன் கூறுகையில், ‘‘ஏத்தாப்பூரை மையமாக கொண்டு இயங்கி வரும் மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாக 3வது ரக மரவள்ளி விதையை கண்டறிந்துள்ளோம். இதனை கோவை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் இணைந்து, அதன் மகசூல், மாவுச்சத்து அதிகரிப்பு பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த புதிய மரவள்ளி விதையை பயிரிடும் போது ஏக்கருக்கு 22 முதல் 26 டன் வரை மகசூல் கிடைக்கும். அதோடு மாவுச்சத்து 30 சதவீதம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த புதிய மரவள்ளி விதையை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிடுவோம். அப்போது, அதற்கான புதிய பெயரை சூட்டுவோம். அதுவரை தற்போது கோடுவேட் மூலம் ஆராய்ச்சிக்காக ஆங்காங்கே பயிரிடப்பட்டு, பரிசோதனை செய்து வருகிறோம்,’’ என்றார்.