கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு சாக்கடை கால்வாய் வசதி கேட்டு பெண்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
சேலம், செப்.21: சேலம் மாநகரம் மெய்யனூர் விஎம்எம்ஆர் நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக அமைக்கப்படாததால், கழிவு நீர் வெளியேற முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் சாக்கடை நீர் புகுந்து வருகிறது. இதனால் மக்கள் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சாக்கடை கால்ாய் வசதி கேட்டு, அப்பகுதி மக்கள், நேற்று காலை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மெய்யனூர் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ இந்த பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுகளால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சாக்கடை கால்வாய் அமைக்க நிதி இல்லாததால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். நாங்களே ஒன்று சேர்ந்து பணத்தை திரட்டி பணம் தருகிறோம் எனக் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,’ என்றனர்.


