சேலம், செப்.21: புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி ஆடு, கோழி இறைச்சி விற்பனை 60 சதவீதம் சரிந்துள்ளது. வாடிக்கையாளர்கள் வருகை இல்லாமல் பல கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவத்தை தவிர்த்து, விரதம் இருந்து சுவாமியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. நடப்பாண்டு புரட்டாசி மாதம் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக ஆடு, கோழி இறைச்சிக்கடைகளில் விற்பனை சரிந்துள்ளதாகவும், அதேநேரத்தில் மீன்களின் விற்பனை குறைந்துள்ளது. சேலத்தில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் வாடிக்கையாளர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து சேலத்தை சேர்ந்த மீன் வியாபாரிகள் கூறுகையில், `சேலத்திற்கு சென்னை, ராமேஸ்வரம், விசாகப்பட்டணம், தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வருகிறது. வார விடுமுறை நாளில் மீன்களின் விற்பனை அமோகமாக நடக்கும். புரட்டாசி தொடங்கியுள்ளதையொட்டி மீன்களின் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த வாரத்தை விட, நடப்பு வாரத்தில் விலை சரிந்துள்ளது. அதே நேரத்தில், விற்பனையும் குறைந்துள்ளது,’ என்றனர்.
இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், `சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சி கடையும், ஆயிரத்திற்கு மேலான கறிக்கோழி இறைச்சி கடையும் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் கோழியும், நூற்றுக்கணக்கான ஆடுகளும் விற்பனையாகிறது. புரட்டாசி தொடங்குவதையொட்டி கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையில் ஆடு, கோழி இறைச்சி விற்பனை நல்லமுறையில் இருந்தது. நடப்பு வாரத்தில் ஆடு, கோழி இறைச்சி விற்பனை 60 சதவீதம் சரிந்துள்ளது,’ என்றனர்.
காளான் விற்பனை அதிகரிப்பு
ஞாயிறு விடுமுறையையொட்டி நேற்று காளான் விற்பனை அமோகமாக நடந்தது. இதுகுறித்து காளான் வியாபாரிகள் கூறுகையில், `சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் காளான் உற்பத்தியாகிறது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் காளான் விற்பனை அதிகரித்துள்ளது. குழம்பு வகைகள், வறுவல், பிரியாணி, ஊறுகாய் செய்ய அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. வழக்கத்தைவிட காளான் விற்பனை 30 முதல் 40 சதவீதம் அதிகரித்தது. 200 கிராம் கொண்ட காளான் பாக்ஸ் ரூ.45 முதல் ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.


