Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது அதிகளவு தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள 23 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு: பொதுமக்களை தங்க வைக்க நடவடிக்கை

சேலம், செப். 21: சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது, அதிகளவு தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள 23 இடங்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலங்களில், பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் மழைப்பொழிவு இருக்கும். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கில் கொண்டு, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, வடகிழக்கு பருவமழையின் போது, அதிகளவு தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள 23 இடங்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பருவமழையின் போது, அதிகளவு தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள 23 இடங்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை, சேலம் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட சின்னேரி வயல்காடு, கோனேரிக்கரை, சிவதாபுரம், ரயில் நகர், ராமலிங்கா நகர், சீனிவாசா நகர், சேலம் தாலுகாவிற்கு உட்பட்ட தாதுபாய்குட்டை, நாராயணா நகர், சேலம் தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட அகரம் காலனி, கே.பி.கரடு, ஊத்துமலை கரடு, அம்பாள் ஏரி ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் ஒருசில இடங்களில் நடப்பாண்டு தண்ணீர் தேங்காதபடி, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே போல், மாவட்டத்தில் பூலாம்பட்டி பனங்காடு, இடைப்பாடி காட்டூர் பரிசல்துறை, கோட்டமேடு, கோம்பைக்காடு, மேட்டூர் கோல்நாயக்கன்பட்டி, சங்ககிரி காவேரிப்பட்டி அக்ரஹாரம், ஆத்தூர் 10வது வார்டு பன்னீர்செல்வம், கைலாசநாதர் தெரு, வாழப்பாடி இந்திரா நகர், மேட்டூர் மாதையன்குட்டை, தூக்கனாம்பட்டி, நவப்பட்டி, தேவூர் அண்ணமார் கோயில் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைக்க பாதுகாப்பு மையங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவுக் கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதையும், அனைத்து அடிப்படை வசதிகளுடன் உள்ளதை சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, நீர் நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்கள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பு இன்றி தூர்வாரவும், நீர்நிலைகளில் நுழையும் பகுதி மற்றும் வெளியேறும் பகுதிகளில், ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளின் கரைகளை நன்கு பலப்படுத்துவதுடன், தேவைப்பட்டால் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளில் ஆழமான பகுதிகளின் அருகில், கண்டிப்பாக எச்சரிக்கை பலகைகளை வைத்திட வேண்டும். சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் “1077” என்ற கட்டணமில்லா எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் மராமத்து பணிகள்

அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களை பழுது பார்க்க வேண்டும். அரசுக் கட்டிடங்கள், பள்ளி கட்டிடங்கள், சத்துணவு கூடங்களை ஆய்வு செய்து பழுது ஏதேனும் இருப்பின் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக பள்ளி கட்டிடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, சிதிலமடைந்த மற்றும் இடிந்த நிலையில் உள்ள கட்டிடங்களை பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும். மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை உடனடியாக ஆய்வு செய்து பள்ளி கூரைகள் மற்றும் சுவர்களின் பழுது கண்டறியப்படின் அவற்றினை உடன் சரி செய்ய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.