Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தொழிலாளி, இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சேலம், ஜூலை 20: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளி மற்றும் இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவர்களது உடலுக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (57), தொழிலாளி. இவர் கடந்த 14ம் தேதி டூவீலரில் இரும்பாலை அருகே சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், டூவீலர் மீது மோதிய விபத்தில், படுகாயம் அடைந்த செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி செல்வம் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் முன் வந்தனர்.

பின்னர், அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. இதில் கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து செல்வத்தின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல், கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் ஏழுமலை (25). இவர் கடந்த 16ம் தேதி, அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தலையில் பலந்த காயம் அடைந்தார். அவரை சாலையில் சென்றவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த 18ம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் முன்வந்தனர். தொடர்ந்து இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் கண்கள் ஆகிய உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அதில் இருதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு கண்கள் மற்றும் ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில், டீன் (பொ) ராஜ்குமார் தலைமையில் உயிரிழந்த ஏழுமலையின் உடலுக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.