சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் நீர்காகங்களை வேட்டையாடி விற்க முயன்ற வாலிபர் கைது 24 நீர்காகங்களின் இறைச்சி பறிமுதல்
சேலம், செப்.18: சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் நீர்காகங்களை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 24 நீர்காகங்களின் இறைச்சியை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பேரேஜ் சாலையில் உள்ள இறைச்சி கடையில் வனத்துறையின் அட்டவணைப்படுத்தப்பட்ட நீர்வாழ் உயிரினமான நீர்காகங்களை இறைச்சியாக்கி விற்பனை செய்து வருவதாக சேலம் மாவட்ட வன அலுவலர் யஸ்வந்த் அம்புல்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின்பேரில், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சுகுமார் தலைமையில் வனவர் தினேஷ், வனக்காப்பாளர் விஜயன் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பேரேஜ் சாலையில் உள்ள ஒரு மீன் கடையில் 24 எண்ணிக்கையிலான நீர்காகங்களை இறைச்சியாக்கி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே அந்த இறைச்சியை வனத்துறையினர் கைப்பற்றி, விற்பனைக்கு வைத்திருந்த கோனேரிப்பட்டியை சேர்ந்த குஞ்சப்பன் மகன் சசிகுமாரை (24) அதிரடியாக கைது செய்தனர். தொடர் விசாரணையில், சங்ககிரி தேவூர் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் நீர்காகங்களை வேட்டையாடி எடுத்துவந்து, தோல் உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைதான சசிகுமார் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
வனத்துறையின் அட்டவணைப்படுத்தப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் பறவைகள் பிரிவில் நீர்காகம் (வரிசை எண்-164) இடம் பெற்றுள்ளது. இந்த நீர்காகத்தை வேட்டையாடுவதோ, கொன்று சமைத்து சாப்பிடுவதோ சட்டப்படி குற்றமாகும். அதனால், இத்தகைய செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


