சேலம் மாநகரில் சுகாதாரத்துறை அதிரடி: குப்பையை நான்கு வகையாக பிரித்து ெகாடுப்பது கட்டாயம்; மீறும் வீடுகளுக்கு ரூ.50, வணிகர்களுக்கு ரூ.500 அபராதம்
சேலம், செப்.18: சேலம் மாநகரில் நான்கு வகையாக குப்பையை பிரித்து கொடுப்பது கட்டாயம். இதை மீறினால் வீடுகளுக்கு ரூ.50, வணிகர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சியில், தனியார் நிறுவனம் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இருந்து காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள் என மக்கும் குப்பையும், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற மக்காத குப்பையும் பிரித்து பெறப் படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிரி உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி, பொதுமக்கள் தங்கள் வளாகத்தில் உருவாகும் திடக்கழிவுகளை 4 வகைகளாக பிரிக்க வேண்டும். சமையலறை கழிவுகள், மரம், காய்கறி கழிவுகள், உணவு கழிவுகள், இலைகள், மலர்கள் ஆகியவற்றை உரமாக்கும் வகையில் பச்சை நிற கூடை போட்டு கொடுக்க வேண்டும்.
காகிதம், பிளாஸ்டிக் பாட்டில்கள், மினி கேன்கள், செய்திதாள்கள் ஆகியவற்றை மறு சுழற்சி செய்யும் வகையில் நீல நிற கூடையில் போட்டுக் கொடுக்க வேண்டும். மாதவிடாய் துணிகள், டயாப்பர்கள், பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர், மாஸ்க்குகள் ஆகியவற்றை பாதுகாப்பாக அகற்றும் வகையில் சிவப்பு நிற கூடையிலும், மின்னணு சாதனங்கள், பேட்டரிகள், மின்விளக்குகள், உடைந்த கண்ணாடி ஆகியவற்றை கையாளும் வகையில் கருப்பு கூடையிலும் பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதிகள் குறித்து, மக்கள் பிரதிநிதிகளுக்கு விளக்க பயிற்சி அளித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, பலர் திடக்கழிவுகளை பிரிக்காமல் கொடுப்பதும், சாக்கடைகளில் கொட்டுவது, சாலையோரங்களில் எறிவது, தீ வைத்து எரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இச்செயல்கள் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது. எனவே, தங்கள் வளாகத்தில் உருவாகும் திடக்கழிவுகளை பொதுமக்களும், வணிகர்களும் கட்டாயமாக நான்கு வகைகளாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கும், மக்கள் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவரில் ஓவியம் வரையப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாநகரில் நான்கு வகையாக குப்பையை பிரித்து கொடுப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நான்கு வகையாக குப்பையை பிரித்து கொடுக்க தவறும் பட்சத்தில், குடியிருப்புகளுக்கு ரூ.50, வணிகர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்,’ என்றனர்.


