சேலம், ஆக.18: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐகளில் நடப்பாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கு வரும் 31ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், சேலம் மாவட்டத்தில் கோரிமேடு அரசு ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் அணை, கருமந்துறை பழங்குடியினர் ஐடிஐ என மொத்தம் 4 அரசு ஐடிஐகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், மோட்டார் வாகன மெக்கானிக் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. அதேபோல், தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப 4.0 பாடப்பிரிவில் இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபக்சரிங், அட்வான்ஸ்டு சிஎன்சி மெசினிங் டெக்னீசியன், மேனுபக்சரிங் கன்ட்ரோல் ஆட்டோமேஷன் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளில் 2026-27ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு ஆன்லைன் கலந்தாய்வு மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஐடிஐ பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. காலியாக உள்ள இடங்களுக்கு ஐடிஐகளில் நேரடி மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. ஒருசில பாடப்பிரிவுகளில் மட்டும் ஏராளமான காலியிடங்கள் உள்ளது.



