Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பாதசாரிகள் கடந்து செல்ல நவீன சிக்னல்

சேலம், ஜூலை 18: சேலம் நான்கு ரோடு பஸ் ஸ்டாப் அருகே பாதசாரிகள் பாதையை கடந்து செல்லும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிக்னலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: சேலம் மாநகரில் கலெக்டர் அலுவலக சந்திப்பு, சீலநாயக்கன்பட்டி சந்திப்பு, டன்லப் சந்திப்பு, ஐந்து ரோடு மேம்பாலம் ஆகிய இடங்களில் நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைகவசம் அணியாத வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் போடாமல் செல்லும் டிரைவர்கள், செல்போன் பேசி கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறையை மீறி வாகனங்களை ஓட்டி செல்பவர்களை கண்காணித்து வழக்குகள் பதியப்பட்டு, ஓட்டுநரின் செல்போனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.

சீலநாயக்கன்பட்டி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகிலும், கோவை ரோட்டில் அரியனூர் விஎஸ்ஏ கல்லூரி அருகிலும், பெங்களூரு ரோட்டில் மணிபால் மருத்துவமனை அருகிலும் நவீன கேமரா மூலம் அதிக வேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து வழக்கு பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். சேலம் மாநகரில் கடந்த ஆண்டு வாகன விபத்தினால் 250 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், தலைகவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டுநர்கள் 101 பேரும், பின்னால் அமர்ந்து வந்தவர்கள் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும்.

மாநகரில் 20 இடங்களில் தற்காலிகமாக பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டு போக்குவரத்தை சீர் செய்ய நடைமுறை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், துணை கமிஷனர் அங்கீத்சிங், உதவி கமிஷனர்கள் ராமலட்சுமி, ஜானகிராமன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உடனிருந்தனர்.