வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
சேலம், அக்.17: சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்து, விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் கெங்கவல்லியைச் சேர்ந்த ராகுல்காந்தி பேசுகையில், ‘‘வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க 50 சதவீத மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தை போல, இதனை ரூ.25 ஆயிரமாக பிரித்து, 4 நபர்களுக்கு வழங்க வேண்டும். ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,’’ என்றார்.
காடையாம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் பேசும்போது, ‘‘காடையாம்பட்டி பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மழைவளம் குறைந்துள்ளது. இதுகுறித்து விரிவான ஆய்வுகள் நடத்தி, உரிய காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்,’’ என்றார்.
ஊனத்தூரைச் சேர்ந்த பெரியண்ணன் பேசுகையில், ‘‘பால் உற்பத்தி விவசாயிகளிடம் லிட்டருக்கு கூடுதலாக ரூ.1 பிடித்தம் செய்வது குறித்து விசாரிக்க வேண்டும். அரசு அலுவலர்கள் உரிய நேரத்தில் தங்களது அலுவலகங்களுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, மனுக்களுக்கு சம்பந்தமில்லாத பதில்களை அளிக்கின்றனர்,’’ என்றார். பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, ‘‘மலைவாழ் மக்களுக்கு உரிய காலத்தில் வனஉரிமைச் சான்று வழங்க வேண்டும். இது தாமதமாவதால், வனத்துறையின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆளாகின்றனர். கரியகோயில் அணையை தூர்வாரி, அதிலிருந்து கிடைக்கும் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்,’’ என்றார்.
கல்வராயன்மலையைச் சேர்ந்த பொன்னுசாமி பேசுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் அதிக மலைக்கிராமங்கள் உள்ளதால், மாவட்ட கலெக்டர் அப்பகுதிகளுக்கு சென்று தொடர் ஆய்வு செய்ய வேண்டும். அபிநவம் மாதிரிப்பள்ளியில் ஏராளமான மாணவிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்,’’ என்றார். அரசிராமணியைச் சேர்ந்த நவநீதகண்ணன் பேசும்போது, ‘‘பால் கொள்முதல் விலை உயர்வு, பயிர்க்கடன் ரத்து போன்றவற்றின் பலன் விவசாயிகளுக்கு முழுமையாக சென்று சேர வேண்டும். வறட்சி காரணமாக சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’’ என்றார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் 77,457 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் யூரியா 7,401 மெட்ரிக் டன்னும், டிஏபி 2,699 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2,563 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 12,490 மெட்ரிக் டன்னும், எஸ்.எஸ்.பி 996 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 26,149 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 162.04 மெட்ரிக் டன் நெல் விதைகள், 132.714 மெட்ரிக் டன் சிறுதானிய விதைகளும், 61.48 மெட்ரிக் டன் பயறுவகை விதைகளும், 37.144 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், டிஆர்ஓ ரவிக்குமார், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கமலம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், கால்நடை பாராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் முருகன், தோட்டக்கலை துணை இயக்குநர் மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


