Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சேலம் மாநகரில் 250 விநாயகர் சிலைகள் மூக்கனேரியில் கரைப்பு

சேலம், செப்.17: சேலம் மாநகரில் வைக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், கன்னங்குறிச்சி மூக்கனேரியில் நேற்று மாலை கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சேலம் மாநகரில் உள்ள முக்கிய இடங்களில், 1350 விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். இந்த சிலைகளை மூக்கனேரி, மேட்டூர், பூலாம்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்று மக்கள் கரைத்தனர். இதனிடையே, சேலம் மாநகரில் வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை, கன்னங்குறிச்சி மூக்கனேரியில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்திருந்தனர். சேலம் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம், குமாரசாமிபட்டி எல்லை பிடாரியம்மன் கோயில் முன்பு நேற்று மாலை நடந்தது.

சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். பாஜ மாநில இளைஞரணி தலைவர் சூர்யா, சாமிநாதபுரம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சதீஸ் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டு, ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில் பெண்கள் கைகளில் விளக்குகளை ஏந்தியவாறு பங்கேற்றனர். குழந்தைகள் விநாயகர், சிவன், பார்வதி, மீனாட்சி, பெருமாள் வேடம் அணிந்து ஊர்வலமாக நடந்து சென்றனர். மேலும், தாரை, தப்பாட்டம், மேளதாளங்கள் முழங்க, 80க்கும் மேற்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து கன்னங்குறிச்சி மூக்கனேரிக்கு சென்றன. பின்னர், மூக்கனேரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் ராட்சத கிரேன் மூலம் ஏரியில் இறக்கி கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமைச்சர் பங்கேற்பு: சேலம் மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம், நேற்று மாலை நடந்தது. எல்லைப்பிடாரியம்மன் கோயில் முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சென்றனர். ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள், அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக மூக்கனேரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனும் கலந்து கொண்டார்.