ஆத்தூர், ஆக.17: ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் பகுதியில், சாலையோரம் சுரேஷ் என்பவர், தகர கொட்டகை அமைத்து டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களாக கடை திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடையில் திடீரென தீப்பற்றி கரும்புகை வெளியேறியது. இதை கண்டு அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில், வீரர்கள் விரைந்து வந்தனர். அங்கிருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ மளமளவென அதிக அளவில் எரியத்தொடங்கியது. இதனால், பொதுமக்கள் மற்றும் போலீசார் அச்சம் அடைந்து தப்பி ஓடினர். தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின், தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை முழுமையாக அணைத்தனர். தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து, ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



