Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ராஜகணபதி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

சேலம், ஆக.17: சேலம் ேதர்நிலையம் ராஜகணபதி கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலின் உபகோயிலான ராஜகணபதி கோயில் தேர்நிலையம் பகுதியில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் 30ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கியது. கடந்த ஜூன் 5ம் தேதி, முகூர்த்தக்கால் நடப்பட்டது. கோயிலில் புதியதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்கு ஜூன் 11ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தைலகாப்பு செய்யப்பட்டது. இதற்கு 15 அடி நீளத்தில் தேக்குமரம் செதுக்கி தயார் செய்து வந்து பிரத்யேகமாக வடிவமைத்த தகர தொட்டில் மூலிகை எண்ணெய் ஊற்றி, அதில் கொடிமரத்தை மூழ்கடித்து 48 நாட்கள் ஊற வைத்தனர்.

நேற்று காலை 7 மணியளவில், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், புதிய கொடிமரம் யாக பூஜை செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கோயில் கருவறை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா வரும் 24ம் தேதி தொடங்குகிறது. 30ம் தேதி காலை 7.30 மணிக்குமேல் 8.35 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோயில் எதிரே உள்ள மண்டபத்தில் 25 யாக குண்டங்கள், அருகில் உள்ள மற்றொரு இடத்தில் 21 யாக குண்டங்கள் என 46 குண்டங்களுடன் பிரமாண்ட யாக சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.