சேலம், ஆக.17: சேலம் மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை விரைந்து முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் மாநகராட்சியில் 15 ஆண்டுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியால், பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதே போல், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளால் மாநகரில் முக்கிய சாலைகள் முதல் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் வரை வெட்டி வீசப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்துள்ள பகுதிகளில், புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சேலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
இந்த மழையால் மாநகரில் பெரும்பாலான சாலைகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளிலும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களில் உள்ள முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக மாறி அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த சாலைகள் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



