Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 3,492 விவிபேட் இயந்திரங்களில் வேட்பாளர் விவரம் நீக்கும் பணி துவக்கம்: அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

சேலம், ஜூன் 16: சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட 3,492 விவிபேட் இயந்திரங்களில் வேட்பாளர் விவரம் நீக்கும் பணி தொடங்கியது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட் இயந்திரங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் கருவிகளில் உள்ள வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் நீக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரங்களில் தெர்மல் காகித சுருள், முகவரி தாள்கள் நீக்கம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இளம்பகவத் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு அறையில் தொடங்கியது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15ம் தேதி வெளியிடப்பட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 23ம் தேதியன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. வாக்குப்பதிவின்போது சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3,469 வாக்குச் சாவடிகளில் 3,492 சின்னம் காட்டும் (விவிபேட்) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு அறையில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்குப்பதிவின்போது விவிபேட் இயந்திரங்களில் தெர்மல் காகித சுருள், முகவரி தாள்கள் நீக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு காலாண்டும் மேற்கொள்ள வேண்டிய தணிக்கை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் இளம்பகவத் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. அனைத்து விவிபேட் கருவிகளிலும் உள்ள தெர்மல் காகித சுருள் மற்றும் முகவரி தாள்கள் நீக்கம் செய்து, மீண்டும் பழைய நிலையில் விவிபேட் கருவி வைக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) நந்தனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ராஜேஷ் கண்ணா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து

கொண்டனர்.