சேலம், அக்.15: சேலம் வழியே சென்ற கேரளா ரயிலில் கடத்தி வரப்பட்ட 4.5 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளாவிற்கு வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க ஆர்பிஎப் மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசில் தனிப்படைகள் அமைத்து சோதனையிடுகின்றனர். இந்த வகையில் நேற்று விசாகப்பட்டினம்-கொல்லம் எக்ஸ்பிரசில் சேலம் தனிப்படை போலீசார் பொம்மிடியில் இருந்து சேலம் ரயில் நிலையம் வரை சோதனை நடத்தினர். அதில், முன்பக்க முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அதனை தனிப்படை போலீசார் கைப்பற்றி பரிசோதனை செய்தனர்.
உள்ளே 4.5 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்து, அப்பெட்டியில் பயணித்த நபர்களிடம் கடத்தி வந்த நபர்கள் பற்றி விசாரித்தனர். ஆனால், கஞ்சாவை கடத்தியவர்கள் யார் எனத்தெரியவில்லை. இதையடுத்து சிக்கிய 4.5 கிலோ கஞ்சாவை சேலம் ரயில்வே போலீசில் தனிப் படையினர் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார், அதனை கடத்தி வந்த நபர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


