Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பனமரத்துப்பட்டி வழியாக மீண்டும் தும்பல்பட்டிக்கு அரசு பேருந்துகள் இயக்க கிராம மக்கள் எதிர்பார்ப்பு : அவதிப்படும் தொழிலாளிகள், பள்ளி மாணவர்கள்

சேலம், ஜூலை 15: சேலம் பனமரத்துப்பட்டி வழியாக தும்பல்பட்டிக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் 2ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே வழக்கம்போல் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டதாக புகார்கள் தொடர்ந்து வருகிறது. இவற்றை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தவகையில் சேலம் பனமரத்துப்பட்டி வழியாக சுற்றுப்புற பகுதிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட பேருந்துகள், தற்போது இயக்கப்படுவதில்லை என்ற குமுறல் மக்களிடையே எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என்று பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்தில் ஆழ்ந்து வருகின்றனர். இதேபோல் 4முறை இயக்கப்பட்ட பேருந்துகள், தற்போது 2முறை மட்டுமே இயக்கப்படுவதும் சிரமத்திற்கு வழிவகுத்துள்ளது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பனமரத்துப்பட்டி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சமூக மேம்பாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த 2007ம் ஆண்டு முதல் சேலத்தில் இருந்து பனமரத்துப்பட்டி வழியாக தும்பல்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் (11ஏ) பேருந்து இயக்கப்பட்டது.

இந்த பேருந்து தினமும் காலை 6.08மணிக்கு மஞ்சப்பாலிக்கும், காலை 9.10க்கு கம்மாளப்பட்டிக்கும் இயக்கப்படும். மதியம் 12மணிக்கு புதிய பேருந்து நிலையம் வழியாக ஜங்ஷனுக்கும், மதியம் 1.10மணிக்கு மஞ்சப்பாலிக்கு இயக்கப்படும். மேலும் மதியம் 1.10மணிக்கும், மாலை 4.55மணிக்கும், இரவு 9.35மணிக்கும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இந்த பேருந்து மஞ்சப்பாலிக்கு இயக்கப்பட்டது. 2019ம் ஆண்டு கொரோனா காலத்தில் இந்த பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 7ம்தேதி பேருந்து சேவை தொடங்கியது. ஆனால் தற்போது இந்த பேருந்து காலை 9.10மணிக்கு கம்மாளப்பட்டிக்கும், மதியம் 1.10மணிக்கு மஞ்சப்பாலிக்கும் என்று 2முறை மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால் காலை, மாலைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும், தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்தில் ஆழ்ந்து வருகின்றனர். மேலும் காலை நேரத்தில் 11ஏ எண் கொண்ட பேருந்து இயங்காததால் அளவுக்கு அதிகமான மக்கள், ஒரே நேரத்தில் ஏறிச்செல்கின்றனர். இதனால் விபத்து போன்ற அபாயங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதேபோல் மாலை வேளையில் இந்த பேருந்து இயக்கப்படாததால், அதற்கடுத்து வரும் 11சி பேருந்தில் மாணவ, மாணவிகள் அதிகளவில் ஏறுகின்றனர். இதனால் அபாயகரமாக தொங்கிக் கொண்டே செல்லும் நிலையும் தொடர்கிறது.இப்படிப்பட்ட சூழலில் 11ஏ பேருந்து காலை, மாலை வேளைகளில் சின்னத்திருப்பதி வழியாக ஜங்ஷனுக்கும், முத்துநாயக்கன்பட்டிக்கும் இயக்கப்படுகிறது.

இதனால் ஏற்கனவே அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து என்ன ஆனது? என்ற கேள்வியும் எழுகிறது. இதேபோல் மதியவேளையில் (12.45மணி) இயங்கும் (11பி) பேருந்தும், 1.10க்கும் இயங்கும் (11ஏ) பேருந்தும் வாரத்தில் 2அல்லது மூன்று நாட்கள் இயங்குவதே இல்லை. இதை அனைத்தையும் சீரமைத்து கொரோனா காலத்திற்கு முன்பிருந்தது போலவே பேருந்துகளை இயக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் இதற்குரிய நடவடிக்கை எடுத்தால் மாணவ, மாணவிகள், தொழிலாளிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பு மக்களின் சிரமமும் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.