Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சியில் ஆசிரிய பயிற்றுநர்கள் புறக்கணிப்பு: மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட்டதால் அதிருப்தி

சேலம், அக்.14: சேலத்தில் நடந்து வரும் இரண்டாம் பருவ பயிற்சிக்கு ஆசிரிய பயிற்றுநர்களை அனுப்பாமல், மாற்றுப்பணியில் ஈடுபட வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 7ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறையும், 8 முதல் 12ம் வகுப்பு வரை முழு ஆண்டு கல்வி முறையும் அமலில் உள்ளது. தொடக்க நிலை வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், அந்தந்த பருவத்திற்கான புத்தகங்கள் தனித்தனியாக வழங்கப்படுகிறது. இதனிடையே, நடப்பாண்டு 1 முதல் 3ம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் இரண்டாம் பருவத்திற்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதனை முறையாக மாணவர்களுக்கு கற்பிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாநில அளவிலான பயிற்சியில் கலந்துகொண்ட கருத்தாளர்கள், மாவட்ட அளவில் ஆசிரிய பயிற்றுநர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கி வருகின்றனர். இவர்கள் வட்டார அளவில் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இதனிடையே சேலம் மாவட்ட அளவிலான பயிற்சியில் ஆசிரிய பயிற்றுநர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மாற்றுப்பணிக்கு அனுப்பியதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரிய பயிற்றுநர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் நடப்பு 2026-2027ம் கல்வியாண்டில் 1முதல் 3ம்வகுப்பு வரை இரண்டாம் பருவ புதிய பாடநூல்களை நடைமுறைப்படுத்த மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் 2,314 ஆசிரியர்கள் 1 முதல் 3ம் வகுப்பு வரை பாடம் நடத்துகின்றனர். இவர்களுக்கு ஒன்றிய அளவில் பயிற்சி வழங்க 50 இடைநிலை ஆசிரியர்கள், 50 ஆசிரிய பயிற்றுநர்கள் என மொத்தம் 100 பேருக்கு பயிற்சி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 2 நாட்களாக உத்தமசோழபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்த மாவட்ட அளவிலான பயிற்சியில், பெரும்பாலான வட்டாரங்களில் இருந்து ஆசிரிய பயிற்றுநர்கள் கலந்துகொள்ளவில்லை. மாறாக, பள்ளியில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பயிற்சிக்கு சென்றனர். குறிப்பாக, மாவட்டத்தில் மொத்தமுள்ள 21 கல்வி ஒன்றியங்களில், சேலம் ஊரகம், ஏற்காடு, காடையாம்பட்டி, தாரமங்கலம், வீரபாண்டி ஆகிய 5 ஒன்றியத்தில் இருந்து ஒரு ஆசிரிய பயிற்றுநர்கள் கூட இந்த பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை. இதேபோல், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், சேலம் நகர்ப்புறம், ஓமலூர், நங்கவள்ளி, இடைப்பாடி, மகுடஞ்சாவடி ஒன்றியங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கைக்கு பதிலாக, ஓரிரு ஆசிரிய பயிற்றுநர்களுக்கு மட்டுமே பயிற்சிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதற்கான பணிகளை மேற்கொள்ள ஆசிரிய பயிற்றுநர்கள் அனுப்பப்பட்டனர்.

பொதுவாக ஆசிரிய பயிற்றுநர் பணியை பொறுத்தவரை, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சார்ந்த பயிற்சி வழங்குவதே பிரதானமானது. மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அவ்வப்போது கல்வியில் புகுத்தப்படும் புதுமைகள் மற்றும் நவீன கற்றல் முறைகளை தெரிந்து கொண்டு, அதனை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு வரை இப்பணி சிறப்பாக நடந்து வந்த நிலையில், தற்போதைய புதிய அரசில் இதுகுறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், அதிகாரிகளும் தங்களது விருப்பம் போல பணிஒதுக்கீடு செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.