Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை

சேலம், ஜன.12: சேலம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். உதவித்தொகை மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் அரசின் பிறதுறை சார்ந்த நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.