Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.6.12 கோடியில் அதிநவீன முழுஉடல் பரிசோதனை மையம் 4 பிளான்களில் மேற்கொள்ள கட்டணம் நிர்ணயம்

சேலம், செப்.11: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.6.12 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன முழு உடல் பரிசோதனை மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் தேவிமீனாள் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் இளம்பகவத், எம்எல்ஏக்கள் லட்சுமணன், சிவக்குமார், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் பங்கேற்று புதிய அதிநவீன முழு உடல் பரிசோதனை மையத்தை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து நடந்த விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: சென்னையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில், மிகக்குறைந்த கட்டணத்தில் அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் செயல்படுகிறது. அங்கு தனியார் மருத்துவமனைகளை விட, கட்டணம் மிகக்குறைவாகவும், அதி தரத்துடனும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசு உயரதிகாரிகளும் பரிசோதனைகளை செய்து கொள்கின்றனர். அதுபோல, சேலத்திலும் தற்போது அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அனைத்து மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள அதிநவீன முழு உடல் பரிசோதனை மையத்தில், பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள கட்டண அடிப்படையில் 4 பிளான்கள் உள்ளன. கோல்டு ரூ.1,000, டயமண்ட் ரூ.2,000, பிளாட்டினம் ரூ.3,000, பிளாட்டினம் பிளஸ் ரூ.4,000 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு திட்டத்திற்கு ஏற்ப உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 14 வகையான பரிசோதனைகள் கட்டணமின்றி செய்யப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்திலும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்கள் (மாஸ்டர் பிளான்) தீட்டப்பட்டு, அதற்கேற்ப வளர்ச்சித்திட்டங்கள் செய்யப்படும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை அறிந்து பயன்படுத்த கட்டண செயலிகள் நிறைய உள்ளன. அதுபோன்ற செயலி உருவாக்கப்பட்டு, கட்டணமின்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை நாள், நேரம் உள்ளிட்டவைகளை தாங்களே பதிவு மேற்கொள்ளும் வகையிலான முன்பதிவு திட்டம் செயல்படுத்தப்படும்.

செயற்கை கருவூட்டல் சிகிச்சை 31 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 6 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கொண்டு வரப்படும். அவற்றில், சித்த மருத்துவமும் இணைந்து, சிகிச்சை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு வீடு தேடி வந்து, ரத்தப் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவக்கட்டமைப்பினை, உயர் தர நிலைக்கு கொண்டு செல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இவ்விழாவில், மருத்துவக்கல்வி இயக்குநர் லோகநாயகி, மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.