அதிமுக பிரமுகர் மகள் கொலை வழக்கு கைதான மருத்துவமனை நிர்வாகியின் வீடியோ புகைப்படம் ஒப்பீடு ஆய்வுக்கு அனுப்பி வைப்பு சேலம் நீதிமன்றம் நடவடிக்கை
சேலம், செப்.10: சேலத்தில் அதிமுக பிரமுகர் மகள் கொலை வழக்கில் கைதான மருத்துவமனை நிர்வாகியின் வீடியோ மற்றும் புகைப்படம் ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி (38). பி.டெக். இன்ஜினியரான இவர் அதிமுக பிரமுகர் டெல்லி ஆறுமுகத்தின் மகள் ஆவார். திருமணமாகாத இவர் சங்கர்நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து டியூசன் சென்டர் நடத்தி வந்தார். சேலம் மல்லூர் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் உதயசரண் (45). இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிஓஓவாக பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு குழந்தைகள் உள்ளனர். பாரதிக்கும், உதயசரணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் பாரதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டதாகவும் உதயசரண் கூறினார். ஆனால் பாரதி கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அஸ்தம்பட்டி போலீசார், பாரதியை கொலை செய்ததாக உதயசரணை கைது செய்தனர். மேலும் பாரதியின் அறையில் இருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக நடந்த விசாரணையில், பாரதியின் 50 பவுன் நகையை உதயசரண் அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது. இவ்வாறு அடகு வைத்த நகைகளை போலீசார் அந்தந்த வங்கிகளிலேயே முடக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சேலம் எஸ்சிஎஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கொலை சம்பவம் நடந்த போது, உதயசரண், பாரதி தங்கியிருந்த வீட்டில் இருந்து நான்கு முறைக்கு மேலாக வெளியே சென்று உள்ளே வரும் காட்சிகள், எதிர் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையும் போலீசார் எடுத்து விசாரித்தனர். இந்த வீடியோ காட்சிகளை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இந்த சிசிடிவி கேமரா ‘புட்டேஜ்ஜில்’ இருப்பது உதயசரண் தானா? என்பதை, அவரை கொலை வழக்கில் கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பீடு செய்து உறுதி செய்வதற்கு, இரண்டையும், தடயவியல் துறைக்கு ஆய்வு செய்வதற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள தடய அறிவியல் மையத்துக்கு நீதிமன்றம் அனுப்பியுள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி தோத்திரமேரி பிறப்பித்துள்ளார்.


