சேலம், செப்.10: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு வருடமும் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு, சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவின் கீழ் 1 லட்சத்து 3 ஆயிரத்து 808 பேர் ஆன்லைனில் விண்ணப்பத்திருந்தனர்.
தொடர்ந்து சேலம் காந்தி ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான போட்டியின் தொடக்க விழா நேற்று நடந்தது. போட்டியை சேலம் கலெக்டர் இளம்பகவத் தொடங்கி வைத்தார். எஸ்பி குத்தாலிங்கம், சிஇஓ எல்லப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) கண்மணிதேவி மற்றும் பயிற்சியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இப்போட்டியில், பள்ளி மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், வாலிபால், கைப்பந்து உள்ளிட்டவை நடந்தது. இதில் அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இருந்து ஏரானமான மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வௌிப்படுத்தினர்.
இதேபோல், இறகுப்பந்து போட்டி மாநகராட்சி கிளப்பிலும், கிரிக்கெட் போட்டி நீலாம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கால்பந்து போட்டி புனிதபால் மேல்நிலைப்பள்ளியிலும், வளைக்கோல்பந்து போட்டி அரிசிப்பாளையம் செயின்ட் மேரிஸ் பள்ளியிலும், மேசைப்பந்து போட்டி புனிதபால் மேல்நிலைப்பள்ளியிலும், கேரம் போட்டி உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் நடந்தது. இப்போட்டிகள் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.


