சேலம், அக்.9: வடமாநிலங்களில் இருந்து சேலம் வழியே கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க ரயில்வே போலீசில் தனிப்படைகள் அமைத்து சோதனையிடுகின்றனர். இந்தவகையில் நேற்று, சேலம் வழியே சென்ற பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரசில், ஏட்டு கவியரசு தலைமையிலான தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், முன்பக்க முன்பதிவில்லா பொதுப்பெட்டியில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் கேட்பாரற்று கிடந்த பேக்கை கைப்பற்றி பரிசோதனை செய்தனர்.
அதனுள் 7 கிலோ குட்கா, 200 கிராம் கஞ்சா சாக்லேட் இருந்தது. அதனை கடத்தி வந்த மர்மநபர், போலீஸ் சோதனையை பார்த்து தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதலான 7.2 கிலோ குட்கா, கஞ்சா சாக்லேட்டை சேலம் ரயில்வே போலீசில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.


