சிமெண்டால் ஆன சென்டர் மீடியனை அகற்றி விட்டு தகரத்தில் சென்டர் மீடியன் அமைத்து வருவது ஏன்? புதிய போலீஸ் கமிஷனர் விசாரணை
சேலம், அக்.9: சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களின் ஸ்பான்சர் மூலமாக தடுப்பு கட்டைகள், சென்டர் மீடியன்கள் ஆகியவை போடப்பட்டு வருகிறது. புதியதாக பெரிய நிறுவனங்களின் உதவியுடன் சிக்னல்கள் அமைக்கப்பட்டும் வருகிறது. தற்போது மாநகரில் சென்டர் மீடியன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பெரிய விபத்து ஏற்படும் சாலைகளை கண்டறிந்து அதில் சென்டர் மீடியன் போடுவது வழக்கம். ஆனால் தனியார் நிதி உதவியுடன் தகரத்தில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு வருகிறது. தேவையில்லாத இடங்களில் கூட தற்போது இந்த தகரத்தினால் ஆன சென்டர் மீடியன்கள் போடப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் முள்ளுவாடி கேட் மேம்பாலத்திலும் தகரத்திலான சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக டிரில்லிங் மிஷின் மூலமாக துளையிட்டு அதன் மூலமாக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த மேம்பாலத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சிமெண்டாலான சென்டர் மீடியன்கள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநகரம் முழுவதும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. இது பெரிய பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது தகர சென்டர் மீடியன் தேவையில்லாத இடங்களில் கூட அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருச்சி மெயின் ரோட்டில் போடப்பட்டிருந்த சிமெண்டாலான சென்டர் மீடியனை அகற்றிவிட்டு தகரத்திலான சென்டர் மீடியனை போட்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்நிலையில் காந்தி ரோட்டில் இருந்து வின்சென்ட் வரையுள்ள சிமெண்டாலான சென்டர் மீடியனை இரவோடு இரவாக அகற்றி வருகின்றனர். இதுபொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எந்தவித பாதிப்பும் ஏற்படாத சென்டர் மீடியனை அகற்றுவது ஏன்?, இவ்வாறு அகற்றும் சென்டர் மீடியனை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனை கண்காணிக்கும் போக்குவரத்து பிரிவு அமைதி காத்து வருகிறது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், சென்டர் மீடியன் இல்லாத இடங்களில் சென்டர் மீடியன் அமைப்பது வரவேற்புக்குரியது. ஆனால் உறுதியாக இருக்கும் சிமெண்டாலான சென்டர் மீடியனை அப்புறப்படுத்துவது ஆச்சரியமாக உள்ளது. இதுபற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். எந்த நிறுவனத்தின் மூலம் சென்டர் மீடியனை அமைத்து வருகின்றனர் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும், என்றனர். இதுதொடர்பாக புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநகர போலீஸ் கமிஷனர் பாபுவிடமும் மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் விசாரணை நடத்தி வருகிறார்.


