Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரசு மருத்துவமனை ரத்தவங்கி சார்பில் 87 தன்னார்வ ரத்ததான முகாம்கள் நடத்த திட்டம்: மருத்துவர்கள் தகவல்

சேலம், அக்.9: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் ரத்த வங்கி சார்பில், அடுத்தாண்டு மே மாதம் வரை 87 தன்னார்வ ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு ரத்த பரிமாற்று குழுமத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும் ரத்தம் மற்றும் ரத்தத்தின் கூறுகள் தானமாக பெறப்பட்டு, பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்படுகிறது. பிரசவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசர சமயங்களில், தேவைப்படும் நோயாளிகளுக்கு, உடனடியாக ரத்தம் வழங்கி, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிற ரத்த வங்கிகள் மூலம் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில், தொடர்ச்சியாக ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கி வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: தன்னார்வலர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் முழு ரத்தம், தேவைகளுக்கு ஏற்ப, ரத்த கூறுகளாகவும் பிரிக்கப்படுகிறது. ஒருவர் கொடுக்கும் ரத்தத்தில் இருந்து, பல நோயாளிகள் பயன் பெறுகின்றனர். பிரிக்கப்பட்ட சிகப்பு அணுக்கள் 35 முதல் 42 நாட்கள் வரையும், பிளாஸ்மா கூறுகள் ஒரு ஆண்டு வரையும், உரிய முறையில் சேமித்து வைத்து பாதுகாக்க முடியும். ரத்த தானம் என்பது பல உயிர்களை காப்பாற்றி வருகிறது.

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி சார்பில். தொடர்ச்சியாக ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் 5 முகாம்களும், நவம்பர் மாதத்தில் 18 முகாம்கள், டிசம்பர் மாதத்தில் 8 முகாம்கள், அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் 7 முகாம்கள், பிப்ரவரி மாதத்தில் 4 முகாம்கள், மார்ச் 8 முகாம்கள், ஏப்ரல் மாதத்தில் 4 தன்னார்வ ரத்த தான முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி சார்பில், வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு மே மாதம் வரை 13 முகாம்களும், ஆத்தூர் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி சார்பில், அக்டோபர் முதல் அடுத்தாண்டு மே மாதம் வரை 20 ரத்த தான முகாம்களும் நடத்தப்பட உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனை, மேட்டூர் அரசு மருத்துவமனை, ஆத்தூர் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி சார்பில் 87 தன்னார்வ ரத்ததான முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் குறைந்த பட்சம் 1 சதவீத மக்களுக்கு தேவைப்படும் ரத்த யூனிட்டுகள் இருப்பை உறுதி செய்வதை இலக்காக கொண்டு, தன்னார்வ ரத்த தான முகாம்களை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் ரத்த தானம் அளிக்கலாம்.

தமிழம் முழுவதும் கடந்த ஓராண்டில், அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் மொத்தம் 9.54 லட்சம் யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தின் இலக்கிற்கு மேல், அதாவது அரசு ரத்த வங்கிகள் மூலம் 4 லட்சத்து 51 ஆயிரத்து 324 யூனிட், தனியார் ரத்த வங்கிகள் மூலம் 5 லட்சத்து 2 ஆயிரத்து 314 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில இலக்கை விட 118 சதவீதம் எட்டியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.