ஏற்காடு, செப்.9: ஏற்காட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோயில், பெட்டி கடைகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்காடு முருகன் நகரில் கருமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை திருடிச் சென்றனர். இந்தநிலையில், அதே கோயிலின் பூட்டை உடைத்து மீண்டும் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். கோயிலில் திருடிய கும்பல் அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெரினாகாடு பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு வேணுகோபால் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டை உடைத்து, கடையில் இருந்து ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை கோயிலுக்கு வந்து பார்த்த பக்தர்கள் தங்க தாலி திருடுபோனது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதேபோல் வேணுகோபாலும் போலீசில் புகாரளித்தார். போலீசார் நீண்ட நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர் திருட்டு, போலீசாரின் அலட்சியம் ஆகியவை அப்பகுதி பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


