சேலம், செப்.9:சேலத்தில் ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிக்கப்படும் சிலைகள் சேலத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர தமிழகத்தில் பிற பகுதிகளுக்குவிநாயகர் சிலைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. நீர்நிலைகளில் எளிதல் கரையும் வகையில் காகித கூழ், கிழங்கு மாவில் விநாயகர் சிலைகள், களிமண் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகிறது.
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. இதை முன்னிட்டு சேலம் இரண்டாவது அக்ரஹாரம், சின்னகடைவீதி, 4 ரோடு, 5 ரோடு உள்பட சேலத்தில் பல இடங்களில் ஒரு அடி முதல் 10 அடி வரையுள்ள அன்னவாகன விநாயகர், சிங்கம் விநாயகர், லட்சுமி நாராயண விநாயகர், லிங்கம், ராஜஅலங்காரம், நாகலிங்கம், கஜமுகம், ருத்ரமூர்த்தி, 5 தலை நாகத்தின் மீது சயன விநாயகர், சிவநர்த்தனம், மான், அன்னம், மயில், சிங்கம் வாகனம், அனுமன், நரசிம்மர், மும்முகம், சித்தி புத்தி, ராஜகணபதி உள்பட பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது. ஒரு சிலை ரூ.250 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.


