Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிக்கு பசுமைப்பள்ளி திட்டம் தொடக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு

மேட்டூர், செப்.9: சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுப்பள்ளிகளில், பசுமைப்பள்ளி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பநிலை, தண்ணீர் பற்றாக்குறை, மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல்வேறு சவால்கள் உள்ளன. இதனை எதிர்கொள்ளும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை பள்ளியிலிருந்தே தொடங்குவது மிகவும் அவசியம். இதற்கான புதிய முயற்சியாக அரசுப்பள்ளியில், பசுமைப் பள்ளி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி அடுத்த சந்தைதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பசுமைப் பள்ளி திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் இளம்பவகத் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பசுமைப்பள்ளி திட்டம் என்பது, வெறும் பசுமையான பள்ளி வளாகம் மட்டுமல்லாது, பசுமையான சிந்தனையையும், பொறுப்பான வாழ்க்கை முறையையும் உருவாக்கும் ஒரு புதிய முயற்சியாகும். இயற்கையோடு இணைந்த பசுமையான எதிர்காலத்தை மாணவ, மாணவிகள் புரிந்து கொள்வதுடன், இயற்கையை நோக்கி பயணிக்க வேண்டும். இப்பள்ளியில் மின்சாரத்துறையின் சார்பில் ரூ.13 லட்சத்தில் 5 கிலோவாட் சூரிய மின்சாரத் தகடுகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் ஆழ்துளைக் கிணறு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.2.50 லட்சத்தில் 3,500 சதுரடி பரப்பளவில் மாடித்தோட்டம், 2,500 சதுர அடி பரப்பளவில் காய்கறித் தோட்டம், சமையலறைத் தோட்டம், எருமக்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மாணவர்களை மண், தாவரங்கள் மற்றும் இயற்கை விவசாயத்துடன் நேரடியாக இணைக்க உதவுகிறது.

உணவு எவ்வாறு உருவாகிறது என்பதை மாணவர்கள் பள்ளியிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் இது வழங்குகிறது. அதேபோல், உரக்குழிகள் மூலம் பள்ளியில் உருவாகும் மக்கும் கழிவுகளை பயனுள்ள இயற்கை உரமாக மாற்ற முடியும். இதன் மூலம் கழிவுகளை குறைப்பதோடு, கழிவுகளை ஒரு வளமாக மாற்றும் பழக்கமும் மாணவர்களிடம் உருவாகும். பள்ளி கல்வித்துறையின் சார்பில் ரூ.4.50 லட்சத்தில் கல்வி, விவசாயம், பசுமைப்பள்ளி போன்றவற்றை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைத்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தொடர்ந்து, பசுமைப்பள்ளி வளாகத்தில் நடப்பட்டுள்ள பலன் தரும் மரக்கன்றுகள் மற்றும் செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர், மண்பொம்மை செய்யும் போட்டி, நாடகம், பசுமை வினாடி-வினா, இலை ஓவியப்போட்டி, வேகமாக மரக்கன்றுகள் நடும் போட்டி உள்ளிட்டவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக பசுமை உயிர்திட்ட உறுதி மொழியை கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சிஇஓ எல்லப்பன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் மஞ்சுளா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் (பொ) சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மஞ்சுளா, பசுமைத்தோழர் அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.