சேலம், அக்.8: 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் வரும் 11ம் தேதி நேர்காணல் நடக்கிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் அறிவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வரும் 11ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 34 வயதிற்குள் இருக்க வேண்டும். இலகுரக ஓட்டுநர் உரிமம் எடுத்து, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும் மற்றும் பேட்ஜ் உரிமம் பெற்று குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும். எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்மந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், லைப் சயின்ஸ், பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி உள்ளிட்ட படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 30க்குள் இருக்க வேண்டும். மருத்துவ உதவியாளர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.21,320 வழங்கப்படும்.
மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி, மனிதவள நேர்முகத்தேர்வு நடைபெறும். முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பணியில் சேர்க்கப்படுவார்கள். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 89259-41586 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


