Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சேலம் ஜி.ஹெச்., முழு உடல் பரிசோதனை மையத்தில் 3டி முப்பரிமாணத்தில் மார்பக புற்றுநோயை கண்டறியும் வசதி: மருத்துவர்கள் தகவல்

சேலம், அக்.8: சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்தில் 3டி முப்பரிமாணத்தில் மார்பக புற்றுநோயை கண்டறியும் வசதி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது பல்வேறு துறைகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதனால் சேலம் மட்டுமின்றி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் நோயாளிகள் வருகின்றனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை செய்யும் மையம் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதன்மூலம் ரத்த பரிசோதனைகள், சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடு, கொழுப்பு அளவு, இசிஜி, எக்கோ, அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இல்லாத பல வசதிகள் இங்கு உள்ளது. மேலும், கட்டணமும் குறைவு என்பதால் பொதுமக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது: கோல்ட், டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம்-பிளஸ் என்ற 4 வகையான முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டங்கள் உள்ளது. கோல்ட் திட்டத்தில் பரிசோதனை மேற்கொள்ள ரூ.1000, டைமண்ட் திட்டத்திற்கு ரூ.2000, பிளாட்டினம் திட்டத்திற்கு ரூ.3000, பிளாட்டினம்-பிளஸ் திட்டத்திற்கு ரூ.4000 கட்டணம் செலுத்த வேண்டும்.

கோல்ட் திட்டத்தில் முழுமையான ரத்தபரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கொழுப்பின் அளவு, கல்லீரல் செயல்பாடு, டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும். டைமண்ட் திட்டம் என்பது கோல்ட் திட்ட பேக்கேஜ் பரிசோதனைகளுடன் சேர்த்து, எக்கோ, தைராய்டு உள்ளிட்ட பரிசோதனை செய்யப்படும். பிளாட்டினம் பரிசோதனையில் டைமண்ட் பேக்கேஜ் பரிசோதனைகளுடன் சேர்த்து, டிஜிட்டல் மேமோகிராம், டெக்சா ஸ்கேன், எலும்புகளின் ஆரோக்கியம் குறித்த பரிசோதனை செய்யப்படும். பிளாட்டினம் பிளஸ் திட்டத்தில் பிளாட்டினம் பேக்கேஜ் பரிசோதனைகளுடன் சேர்த்து, முழுமையான கண் பரிசோதனை, டிரட்மில், நுரையீரல் செயல்பாட்டு சோதனை மேற்கொள்ளப்படும்.

முழு உடல் பரிசோதனை செய்ய வரும் நபர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், பரிசோதனைக்கு வரும் நபர்கள் காலையில் சாப்பிடாமல் வரவேண்டும். ரத்த பரிசோதனை எடுத்தபிறகு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இலவசமாக உயர்தர காலை உணவு வழங்கப்படும். அதன்பிறகு மீண்டும் பரிசோதனை செய்யப்படும். 40 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோய் மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்துகொள்ளலாம். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இல்லாத பல வசதிகள், சேலம் அரசு மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மையத்தில் உள்ளது.

இங்கு 3டி முப்பரிமாணத்தில் மேமோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு திசுக்கள் கூட விடாமல் லேயர் லேயராக பார்க்க முடியும். கால்சியம் நுண் படிமங்கள், அதாவது புற்றுநோய்க்கு முந்தைய காரணிகளை கண்டறிய முடியும். ஒரு சென்டி மீட்டருக்கு குறைவாக உள்ள மார்பக புற்றுநோய் கட்டிகளைக்கூட கண்டுபிடித்து விடலாம். அப்போது முழு மார்பகங்களை அகற்றாமல், கட்டிகளை மட்டும் அகற்றி சிகிச்சை அளிக்க முடியும். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த அதிநவீன மேமோகிராம் வசதி உள்ளது. அதிநவீன மருத்துவ உபகரணங்கள், திறன்வாய்ந்த மருத்துவர்கள், சிறப்பு வல்லுநர் குழுவுடன் கூடிய சிகிச்சை அளிக்கப் படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.