சேலம், செப்.8: சேலம் மாவட்டம், மாநகர பகுதியில் கடந்த 2 மாதங்களில் பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 166 கடைகளில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 349 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இக்கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘பள்ளிகள் அருகேயுள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார் வந்தது.
அதன்படி, கடந்த 2 மாதத்தில் நடத்திய சோதனையில் குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 166 கடைகளுக்கு ரூ.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 144 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் அருகே இருக்கும் கடைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது புகையிலை விற்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்,’’ என்றனர்.


