சேலம், செப்.8: சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த விஜிலென்ஸ் சோதனைக்கு பிறகு, மாநகராட்சியில் பணி புரியும் அலுவலர்கள், தங்களது கையில் உள்ள பணத்தை பதிவேட்டில் குறிப்பிட்டு செல்ல வேண்டும் என்று கமிஷனர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கணக்கு பிரிவு, பொறியியல் பிரிவு, சுகாதார பிரிவு, பொது பிரிவு, நகரமைப்பு பிரிவு அலுவலகங்களில், கடந்த மாதம் 27ம் தேதி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பொறியியல் பிரிவு அலுவலகத்தில் இருந்த குப்பையில் ஒரு கவரில் ரூ.50 ஆயிரம் பணம் கட்டாக கிடந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், குப்பையில் பணத்தை போட்ட பணியாளர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கணக்குபிரிவில் இருந்த ஒரு ஒப்பந்ததாரர், தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை அங்குள்ள பைலில் மறைத்து வைக்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக, ஓமலூர் அருகே உள்ள மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் மாதையன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சோதனையில், ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளரிடம் இருந்து இரண்டு வெள்ளை சீட்டு, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது. அதில், அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற பெயரோடு பட்டியல் எழுதப்பட்டு இருந்தது.
அதை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு பிறகு, மாநகராட்சி அலுவலர்கள் பணிக்கு வரும் போது, தங்களது கையில் எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்து, பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் லலித் ஆதித்யநீலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பொது பிரிவு, கணக்கு பிரிவு, பொறியியல் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர், தினமும் காலையில் பணிக்கு வந்ததும், அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் தங்களது கையில் எவ்வளவு பணம் கொண்டு வந்தோம் என்பது குறித்து எழுதி, கையெழுத்து போட்டு விட்டு பணிக்கு செல்கின்றனர்.
இதனை அந்தந்த பிரிவு அதிகாரிகள் கையெழுத்து போட்டு வைத்து கொள்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மாநகராட்சியில் நடக்கும் சோதனைகளில், சர்ச்சையை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி எழுதுவதன் மூலம், சம்மந்தப்பட்ட ஊழியர் எவ்வளவு பணம் கொண்டு வருகிறார் என்பது தெளிவாகும். அதே சமயத்தில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனைக்கு வரும் ேபாது, பணியாளர்கள் எழுதி வைத்துள்ள பணத்திற்கு மேல் அவர்கள் கையிருப்பாக வைத்திருந்தால், அந்த அலுவலர்களே, பொறுப்பு ஏற்றுக்கொள்ள நேரிடும்,’ என்றனர்.


