Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 35 சதவீதமாக குறைக்க வேண்டும்

சேலம், ஜூலை 8: தமிழகத்தில் நடந்த சிறப்பு தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை, 35 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு கடந்த 4, 5ம் தேதிகளில் நடந்தது. இத்தேர்வில் பாடத்திட்டத்தை கடந்து, கடினமான வினாக்கள் இடம்பெற்றிருந்ததால் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சிறப்பு தகுதித்தேர்வில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 35சதவீதமாக குறைக்க வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளதை போல, பணி அனுபவத்தை கணக்கில் கொண்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சோமசுந்தரம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடந்த ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வானது, சுமார் 20ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, பள்ளிகளில் பல சாதனையாளர்களை உருவாக்கிய ஆசிரியர்களின் பணி அனுபவத்தை சோதித்தறியும் வினாக்களை பெற்றிருக்கவில்லை. மாறாக, வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் ஆசிரியர்களது, நினைவாற்றலை சோதிக்கும் வகையில் பாடத்திட்டங்களைத் கடந்து வினாக்கள் அமைந்திருந்தது.

மேலும் பல வினாக்கள் உயர்நிலை சிந்தனை அடிப்படையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை தாண்டி கேட்கப்பட்டிருந்தது. உதாரணமாக, கல்வி உளவியல் பிரிவில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் படிப்பதற்கே நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில் இருந்தது. சமூக அறிவியலில் பல வினாக்கள் ஆண்டுகள் என்ன என்ற அடிப்படையில் கேட்கப்பட்டிருந்தது.

அறிவியல் பாடப்பிரிவை பொறுத்தவரை 6, 7ம் வகுப்புகளில் இருந்து எந்த வினாக்களும் கேட்கப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு, தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 35 சதவீதம் (52 மதிப்பெண்கள்) என நிர்ணயம் செய்திட வேண்டும். மேலும் வயதில் மூத்த ஆசிரியர்களின் பணி அனுபவத்திற்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பணி அனுபவத்திற்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.