சேலம், செப். 7: சேலம் ஜவ்வரிசி, இளம்பிள்ளை சேலை போன்ற உள்ளூர் உற்பத்தி பொருட்களை, டிஜிட்டல் சந்தையில் விற்க தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், பல்வேறு தொழில்களுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டமாக விளங்கி வருகிறது. குறிப்பாக, நெசவு மற்றும் அது சார்ந்த தொழில்கள் நீண்ட காலமாக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இளம்பிள்ளை, மேச்சேரி, ஜலகண்டாபுரம் பட்டுப்புடவைகள் பிரசித்தி பெற்றது. இதே போல், சேலம் ஜவ்வரிசி, சிறுதானிய உணவுப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் போன்ற சேலத்தின் முக்கிய உற்பத்திப் பொருட்களுக்கு, பிற மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.
இப்பொருட்களை டிஜிட்டல் முறையில் சந்தைப்படுத்துவதன் மூலம், தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதன்படி, உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு தேசிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்து பேசினார். இதில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு தேசிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட டி2சி பிராண்டு உரிமையாளர்கள், எப்எம்சிஜி தொழில் முனைவோர், உற்பத்தியாளர்கள், பிராண்டுகள் மற்றும் வணிக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், டிஜிட்டல் முறையிலான விற்பனை மூலம் வாடிக்கையாளர்களை அதிக அளவில் சென்றடைவது, டிஜிட்டல் வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து, தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மேலும், பிளிப்கார்ட் மற்றும் 5க்கும் மேற்பட்ட வங்கி நிறுவனங்கள், 20க்கும் மேற்பட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது சேவைகள் மற்றும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் அரங்குகளை அமைத்துள்ளன. தொழில் முனைவோர் இந்த அரங்குகள் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நேரடியாக கலந்துரையாடி பல்வேறு சேவைகள் மற்றும் ஆதரவுகள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளளாம்.
பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கைத்தறி தயாரிப்புகளுக்கும், இயற்கை உணவுப் பொருட்களுக்கும் பெரும் வரவேற்பு உள்ளது. பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இதற்காக பிரத்யேக பிரிவுகள் உள்ளன. உலக சந்தையை எட்ட வேண்டுமெனில் தயாரிப்பில் ஒரு சதவீதம் கூட தரம் குறையக் கூடாது. `ரிட்டர்ன்’ என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத வகையில், தரமானதாக இருக்க வேண்டும். மேலும், தயாரிப்புகளை நேரடியாக பார்க்க முடியாத நுகர்வோருக்கு, நல்ல போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் தயாரிப்பின் விரிவான விவரக் குறிப்புகள் மூலம் அதன் சிறப்பைக் காட்ட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டன.
விற்பனையாளரின் வெற்றி என்பது, தொடர் முயற்சியில் அதனை மிக மிக நுட்பமாகவும், தரமாகவும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கக்கூடிய சேவையில் எந்த விதமான குறைபாடும் இல்லாமல் வழங்குவதில் தான் அமைந்திருக்கிறது. எனவே, தொழில் முனைவோர்கள், விற்பனையாளர்கள் அனைவரும் சேலம் மாவட்டத்தின் உற்பத்தி பொருட்களை தேசிய அளவிலும், உலக அளவிலும் எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், பிளிப்கார்ட் இயக்குநர் (சந்தை வளர்ச்சி) இர்ஷான் அகமது சித்திக், இணை இயக்குநர் விஷ்ணவ், டிஎன் ஸ்டார்ட் அப் திட்டத் தலைவர் கோபிநாத், சோனா இன்குபேஷன் சென்டர் இயக்குநர் சத்திய மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


