Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பராமரிப்பு பணிகள் நிறைவு; கதவணையில் தண்ணீர் தேக்கி மின் உற்பத்தி தொடங்கியது

இடைப்பாடி, மே 6: இடைப்பாடி அருகே தேவூர் மற்றும் ஊராட்சிக்கோட்டை கதவணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்ததையடுத்து, தண்ணீர் தேக்கப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை கடந்து திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீரையும் காவிரியின் குறுக்கே ஆங்காங்கே உள் நீர்மின் கதவணையில் தேக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது.

இந்நிலையில், வழக்கம் போல் நீர்மின் கதவணையில் பராமரிப்பு பணிக்காக, 10 நாட்களுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை கதவணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், நேற்று காலையில் இருந்து தடுப்பணையில் தண்ணீர் தேக்கப்படுகிறது. தொடர்ந்து மின்சார உற்பத்தி தொடங்கியது. கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக காவிரியில் தண்ணீர் சீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.